

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் மின் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பகிர்மான பிரிவுஇயக்குநர் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தலைமை தேர்தல் அதிகாரி: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது கட்சியினர் மின்திருட்டில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கட்சியினர் மின்திருட்டில் ஈடுபட்டால் உடனடியாக மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
கட்டண விவரம்: பிரச்சாரத்துக்கு தற்காலிக மின் இணைப்பை வழங்கி, அதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் நாள்தோறும் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மின்திருட்டு, தற்காலிக இணைப்பு உள்ளிட்டவற்றை வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளருக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது.