

சென்னை: எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை விரிவாக்க அனுமதிக்கு எதிராக எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு தொடர்ந்த வழக்கில், தமிழக அரசும், தொழிற்சாலை நிர்வாகமும் பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் என்ற உரத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடலில் நிற்கும் கப்பலில் இருந்து அந்த தொழிற்சாலைக்கு அம்மோனியா வாயுவை எடுத்துச் செல்லும் குழாய் கடலில் பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாயில் கடந்த டிச.26-ம் தேதி நள்ளிரவு 11.45 மணியளவில் திடீரென அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதனால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பெரியகுப்பம், சின்னகுப்பம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அதைத்தொடர்ந்து, அந்த தொழிற்சாலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. பசுமை தீர்ப்பாயம் நியமித்த கூட்டு குழுவும் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி தமிழக அரசு அனுமதி வழங்கி இருப்பதை ரத்து செய்து உத்தரவிடக் கோரி எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ‘‘தொழிற்சாலை விரிவாக்க அனுமதியில், கோரமண்டல் நிறுவனம் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் இல்லை என பொய்யான தகவலை அளித்து, விரிவாக்கப் பணிகளுக்கு தொழிற்சாலை அனுமதி பெற்றுள்ளது. விதிகளை மீறி அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் தரப்பில் முன்னாள் நீதிபதி கே.கண்ணன், அரசு சார்பில் சண்முகநாதன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, இதுதொடர்பாக தமிழக அரசு, கோரமண்டல் நிறுவனம் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், விசாரணையை மே 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.