

மதுரை: கோயில் விழாவில் நிபந்தனை களுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தாலுகாவைச் சேர்ந்த லட்சுமணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமம் சிலமலையில் உள்ள ஊத்தம்பாறை கருப்பசாமி கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு போலீஸாரிடம் மனு அளித்தோம். ஆனால் அனுமதி வழங்கவில்லை. எனவே, கோயில் விழாவில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி சதி குமார் சுகுமார குரூப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. புதிதாக மனு அளித்தால் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் போடி நாயக்கனூர் வட்டாட்சியர் சேர்க்கப்படுகிறார். மனுதாரர் ஆடல், பாடலுக்கு அனுமதி கோரி போலீஸார் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம். நிகழ்ச்சியின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற இளைஞர் களை தன்னார்வலர்களாகப் பயன்படுத்தலாம். நிகழ்ச்சியில் சாதி, மத, அரசியல் தலைவர்களைப் பற்றி பேசக்கூடாது. பிளக்ஸ் போர்டு வைக்கக் கூடாது. விதிமீறல் ஏற்படும் பட்சத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்ய போலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டார்.