Published : 15 Apr 2018 09:21 AM
Last Updated : 15 Apr 2018 09:21 AM

பர்னிச்சர் வாங்கியதில் ரூ.10 கோடி மோசடி: ஆளுநர் மாளிகை ஊழியர் 2 பேர் கைது- மேலும் சிலர் சிக்குவார்கள் என போலீஸார் தகவல்

ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர் வாங்கியதில் ரூ.10 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்ததன் பேரில், பர்னிச்சர் கடை உரிமையாளர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 2 பேர் தற்போது கைது செய்யப் பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் மாளிகையான ‘ராஜ்பவன்’, சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ளது. இந்த வளாகத்துக்கு தேவையான அலங்கார பொருட்கள், பர்னிச்சர் பொருட்கள் தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுவது வழக்கம். அடையாறில் பர்னிச்சர் கடை நடத்தும் முகமது யூனுஸ் (57) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர் பொருட்களை விநியோகம் செய்து வந்தார். ஆனால், ஒப்பந்த அடிப்படையில் வழங்காமல், பொருட்கள் வழங்கியதுபோல போலி ரசீதுகளைக் கொடுத்து ரூ.10 கோடி வரை அவர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக 2015 பிப்ரவரி 9-ம் தேதி முதல் 2017-ம் ஆண்டு வரை இந்த மோசடி நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் காவல் நிலையம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ராஜ்பவன் தலைமை கணக்காயர் சவுரி ராஜன் கிண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். கிண்டி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஆளுநர் மாளிகைக்கு அலங்கார பொருட்கள், மெத்தை, தலையணை, பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான முகமது யூனுஸ் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதற்கிடையில், பர்னிச்சர் மோசடியில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்தும் கிண்டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, சில ஊழியர்களுக்கு மோசடியில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, ஆளுநர் மாளிகையில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் ராஜேஷ் (29), துப்புரவு பணியாளர் ஜஸ்டின் ராஜேஷ் (39) ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘‘பர்னிச்சர் மோசடி தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மோசடியில் தொடர்புடைய, உடந்தையாக இருந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’’ என்று கிண்டி போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x