

தருமபுரி: துடைத்து எறியக் கூடிய கட்சி அல்ல திமுக என தருமபுரி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் இண்டூரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 4), திமுக சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.மணிக்கு ஆதரவு கேட்டு நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது...
“தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசுகின்ற பிரதமர் மோடி, திமுக-வை துடைத்தெறிய வேண்டும் என்கிறார். அதேபோல், வேறொரு கூட்டத்தில் காங்கிரஸும் துடைத்தெறியப்பட வேண்டிய கட்சி என்கிறார். இவ்விரு கட்சிகளும் தியாகங்களால் வளர்ந்த கட்சியாகும். இந்திய இறையாண்மையை பாதுகாப்பதில் திமுக என்றைக்கும் சமரசம் செய்து கொண்டதில்லை. அதற்கு, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கடந்த கால செயல்பாடுகள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
வங்கதேச போரின் போது திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு நிதியுதவி அளித்து துணை நின்றவர் முன்னாள் முதல்வர் அண்ணா. இதுபோல ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கி இந்தக் கட்சித் தலைவர்கள் எல்லோருமே மக்கள் நலனுக்காக போராடியவர்கள். மக்கள் நலன் காக்கும் போராட்டத்திலே சிறையில் இருந்தவர்கள் தான் திமுக தலைவர்கள். ஆகவே, திமுக-வை அவ்வளவு எளிதில் துடைத்து எறிந்துவிட முடியாது.
இதேபோல, இந்த நாட்டின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்திலே பிறந்து, லண்டனிலே படித்து 16 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் தான் முன்னாள் பிரதமர் நேரு. அவருடைய தியாகம் அளப்பரியது. இதேபோல, இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போதே படுகொலை செய்யப்பட்டார். அவரது மகன் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார். இப்படி இந்த நாட்டுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்தது தான் நேருவின் குடும்பம். அவர்களுடைய தியாகத்தை போற்றி மக்கள் அவர்களுக்கு பதவி அளித்து வந்தனர்.
இத்தகைய எந்த வரலாறும் இல்லாத கட்சி தான் பாஜக. மக்கள் நலன் காக்கும் போராட்டத்திலே பிரதமர் மோடியோ அல்லது அக்கட்சியின் தலைவர்களோ சிறைக்கு சென்ற வரலாறு கிடையாது. ஆகவே, திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை அவ்வளவு எளிதில் மக்களிடம் இருந்து பிரித்து விட முடியாது.
தமிழகத்திலே இண்டியா கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும், ஓரணியாக இருந்த கட்சிகள் வெவ்வேறு கூட்டணியிலும் போட்டியிடுகின்றன. அதில் ஒரு கட்சி, எதற்காக கூட்டணி மாற்றி அமைக்கிறது என்பதே மக்களுக்கு புரியவில்லை. அந்தக் கட்சியும் தருமபுரியில் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. இதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலே அவர்களுக்கு மக்கள் சரியான முடிவை அளிப்பார்கள்” என பேசினார்.
இந்தக் கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி (கிழக்கு), முனைவர் பழனியப்பன் (மேற்கு), தருமபுரி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பி.தீர்த்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சா.கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆ.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் சாக்கன் சர்மா (கிழக்கு), த.கு.பாண்டியன்(மையம்), கருப்பண்ணன் (மேற்கு) மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.