Published : 04 Apr 2024 08:59 PM
Last Updated : 04 Apr 2024 08:59 PM

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.04: மோடியின் ‘ட்ரெய்லர்’ பேச்சு முதல் பைஜூ’ஸ் நிறுவன வீழ்ச்சி வரை

“10 ஆண்டுகளில் செய்தது வெறும் ட்ரெய்லர்தான்” - பிரதமர் மோடி: “கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்த செயல்கள் வெறும் ட்ரெய்லர்தான்; அதிக விஷயங்கள் இனிதான் நடக்க இருக்கின்றன. நாம் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்” என பிரதமர் மோடி பேசினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பிஹாரில் முதன்முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஜமுய் நகருக்கு வந்த பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் முயன்றார்கள் காங்கிரஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சிகளை, நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு: தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மூன்று டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி: ஸ்டாலின்: “சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்” என்று மோடி அரசை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, அம்பானி - அதானிக்காக தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல விவசாயிகள் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

“விஷப் பாம்பைக் கூட நம்பலாம்... பாஜகவை நம்ப முடியாது!” - மம்தா: பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, "விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால், பாஜகவை நம்ப முடியாது" என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் “மத்திய புலனாய்வு அமைப்புகள், என்ஐஏ, வருமான வரித் துறை, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்றவை பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், ஒரு சமமான களம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம். ‘ஒரே நாடு ஒரே கட்சி’ என்ற கொள்கையை பாஜக பின்பற்றுகிறது" என்று குற்றம்சாட்டினார்.

கேரளாவில் எஸ்டிபிஐ ஆதரவை ஏற்க காங். மறுப்பு: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு அளிக்க எஸ்டிபிஐ (SDPI) முன்வந்த நிலையில், அந்த ஆதரவை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.

காங்கிரஸில் இருந்து விலகிய கவுரவ் வல்லப் பாஜகவில் ஐக்கியம்: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், பாஜகவில் இணைந்துள்ளார்.

கோவையில் ராகுல், ஸ்டாலின் ஏப்.12-ல் பிரச்சாரம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஏப்ரல் 12-ல் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர் என்று திமுக தெரிவித்துள்ளது.

“அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர்” - இபிஎஸ்: உதகையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார். ஆனால், பாஜக குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பைஜு ரவீந்திரன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: 2024-ஆம் ஆண்டின் 200 இந்திய கோடீஸ்வர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம்போல் முகேஷ் அம்பானி முதலிடமும், கவுதம் அதானி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். ஆனால், எதிர்பாராத ஓர் நிகழ்வாக பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

அமலாக்கத் துறை சோதனை, முதலீட்டாளர்கள் உடனான பிரச்சினை, ஊழியர்கள் வேலை இழப்பு என தொடர் சர்ச்சைகளில் பைஜு’ஸ் சிக்கிவந்ததன் விளைவாக தற்போது ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் பைஜு ரவீந்திரன்.

17 ஆயிரத்து 545 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வர்களின் பட்டியலில் இடம்பெற்ற பைஜு ரவீந்திரனின் தற்போதைய சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என ஃபோர்ப்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் சொல்லப்பட்டுள்ளது.

பைஜு’ஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடத்தப்பட்டது.

அமலாக்கத் துறை நடவடிக்கையை தொடர்ந்து பைஜூஸ் பல சவால்களை சந்திக்கத் தொடங்கியது. அதில் முதலாவது பைஜூஸ் தனது நிதிக் கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறியது, கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த தவறியது எனத் தொடரப்பட்ட வழக்குகள். அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் அரை பில்லியன் டாலர்களை பைஜூஸ் நிறுவனம் மறைத்தது என்று குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்தன.

ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு முதலீடும் அமலாக்க இயக்குனரகத்தின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. இந்த சரிவால்தான் தற்போது ஜீரோ சொத்து மதிப்புக்கு குறைந்துள்ளார் பைஜு ரவீந்திரன்.

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்பு: காங்கிரஸின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

“இதுதான் தேர்தல் அணுகுமுறையா?”- சீமான்: “செங்கலைத் தூக்கி வருவதும், போட்டோவைத் தூக்கி வருவதுமா அரசியல்? இதுவா தேர்தல்? இதுவா தலைவர்களின் அணுகுமுறை? மோடியிடம் எடப்பாடி எப்படி சிரிக்கிறார் பாருங்கள் என்று உதயநிதியும், அப்பாவும் மகனும் பிரதமருடன் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று எடப்பாடியும் பேசுகின்றனர். ஏதோ பற்பசை விளம்பரத்தில் நடிக்க வந்தவர்கள் போல” என்று மத்திய சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

சவுமியா அன்புமணி வாகனத்தில் சோதனை: மேட்டூர் அடுத்த தொப்பூர் பகுதியில் தருமபுரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர்.

“நான் போட்டியிட அமேதி மக்கள் விரும்புகின்றனர்”: “அமேதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டுவிட்டார்கள். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதியின் எம்பியாக வேண்டும் என அம்மக்கள் விரும்புகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நான் அரசியலில் சேர்ந்தால், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தத் தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்” என்று சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

“என்னை பாஜக ‘விலை’க்கு வாங்க முடியாது” - பிரகாஷ்ராஜ்: “என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பாஜகவினர் சித்தாந்த ரீதியாக வசதி படைத்தவர்களாக இல்லை” என பாஜகவில் இணையப்போவதாக வந்த வதந்திகளுக்கு பிரகாஷ்ராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x