2023 ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு

2023 ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் பொன்முடி உடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அரசு ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வபாரதி தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளில், அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருக்க கூடாது எனவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, இந்த விதிகளை மீறி, அமைச்சர் பொன்முடியின் உதவியாளராக பணியாற்றி வந்த அரசு ஊழியரான சோமஸ்கந்தன் என்பவர், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணி தொடர்பான இந்த விவகாரத்தை எப்படி பொது நல வழக்காக கருத முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in