

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் இல்லாத சூழலில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதுடன் விலைவாசியும் தமிழகத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமான புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. முக்கியக் கட்சிகளின் பிரச்சாரம் மும்முரமாக நடக்கிறது. இதில் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என புதுச்சேரி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் அருகே இருந்தாலும் புதுச்சேரியின் கலாச்சாரம், பண்பாடு தொடங்கி அரசியல் வரை பல விஷயங்களில் கணிசமான வேறுபாடு உண்டு. பழங்கால அரசர்கள் ஆண்டதற்கான சுவடுகள் மிகவும் புதுச்சேரியில் குறைவு. பிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு கீழ் இருந்த புதுச்சேரிக்குத் தற்போதும் பிரெஞ்சு தொடர்புகளே அதிகம். புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால் ஆகியவை தமிழகத்தின் அருகிலும், மாகே கேரளத்தையொட்டியும், ஏனாம் ஆந்திரம் அருகிலும் அமைந்துள்ளன.
இன்றைக்கு இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கும் புதுச்சேரிக்கு சுதந்திரம் கிடைத்ததே 1954-ல்தான். புதுச்சேரியில் இதுவரை 14 மக்களவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஏனெனில் புதுச்சேரி இந்தியாவில் சேர்ந்தது கடந்த 1963-ம் ஆண்டு தான். தமிழகத்தில் 4-வது மக்களவை தேர்தல் நடந்தபோதுதான் புதுச்சேரியில் முதல் தேர்தலே நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை 10 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. தலா ஒரு முறை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக வென்றுள்ளன. காங்கிரஸில் போட்டியிட்ட சண்முகமும், பாரூக்கும் தலா 3 முறை எம்பிக்களாக இருந்துள்ளனர்.
கடந்த 2019-ல் 14-வது மக்களவைத் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கமும் என்.ஆர்.காங். சார்பில் டாக்டர் நாராயணசாமியும் போட்டியிட்டதில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி தற்போது எம்பியாக உள்ளார். புதுச்சேரியில் இந்துகள் 87 சதவீதம் பேர் உள்ளனர். அதற்கு அடுத்து கிறிஸ்தவர்கள் 6.4 சதவீதமும், முஸ்லிம்கள் 6.1 சதவீதமும் உள்ளனர். எழுத்தறிவில் ஆண்கள் - 91.26 சதவீதமும், பெண்கள்- 80.87 சதவீதமும் உள்ளனர்.புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 979 பெண்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 569 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 151 பேரும் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 28 ஆயிரத்து 921 பேர் உள்ளனர்.
இளையோர் பிரச்சினை பற்றி பொதுமக்கள் கூறுகையில், "புதுச்சேரியில் பெரிய அளவு தொழிற்சாலைகள் இல்லை. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு தமிழகத்தை விட அதிகரித்தே வருகிறது. நிதிப் பற்றாக்குறை, தொழிற்சாலைகள் மூடல், அரசு சார்பு, கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியமில்லை என பல்வேறு பிரச்சினைகளில் அரசும் மக்களும் சிக்கித் தவிக்கின்றனர். வேலைவாய்ப்பின்மையும் கடன் சுமையை மேலும் அழுத்துகின்றன. அதற்கு தீர்வு தேவை" என்கின்றனர்.
அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், “மத்திய அரசை நம்பி வாழும் சூழலே புதுச்சேரியின் பிரதானப் பிரச்சினை. புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கேட்டு பலமுறை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கையில்லை. டெல்லி சென்று போராட்டம் நடத்தியும் பலனில்லை.
மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைவிட, மத்திய அரசு நியமிக்கும் துணைநிலை ஆளுநருக்கே இங்கு அதிகாரம். இதனால், மக்கள் வாக்குக்கு மதிப்பில்லை எனும் சூழல் வெளிப்படையாக தெரிகிறது.
முக்கியமான பஞ்சாலையான ஏஎப்டி மில்லை இயக்கினால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கும். இந்த ஆலைகளை மூடி விட்டு ஜவுளி பூங்கா உள்ளிட்டவற்றை மத்திய அரசிடம் கேட்டு பெறலாம். குறிப்பாக, புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் சேர்க்காததும், அடுத்த முக்கியப் பிரச்சினை. இதனால் நிதி பெறுவதிலும் சிக்கல் உள்ளது. போக்குவரத்து நெரிசலால் மக்கள் அதிகளவில் சிக்கித் தவிக்கின்றனர். பாலம் அமைக்காதது அடுத்த பிரச்சினையாக உள்ளது.
ரேஷன் கடையே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மட்டுமே உள்ளது. இதை தீர்க்கவும் எவ்வித வழியும் இல்லை. பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத சூழல் உள்ளது" என அடுக்கடுக்காக பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.
இம்முறை இண்டியா கூட்டணியில் காங்கிரஸும், தேசிய ஜனநாயகக்கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன. கடந்த சட்டப்பேரவையில் இக்கூட்டணியில் இருந்த அதிமுக தனித்து போட்டியிடுகிறது.
முக்கியக் கட்சிகள் பிரச்சாரத்தை மும்முரமாக நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சி, பிஎஸ்பி, சுயேச்சைகள் களத்தில் உள்ளனர். நீண்ட காலமாக தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க மக்கள் காத்துள்ளனர். வேட்பாளர்களும் பிரச்சினைகளை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.