

ராமநாதபுரம்: 'ஜெயலலிதாவுக்கு இருந்த தைரியம் பழனிசாமிக்கு ஏன் இல்லை?’ என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து நயினார் கோவில், கொடிக்குளம், கொட்டகுடி, அக்கிரமேசி ஆகிய கிராமப் பகுதிகளில் நடிகர் கருணாஸ் பிரச்சாரம் செய்தார்.
அக்கிரமேசி கிராமத்தில் கருணாஸ் பேசும்போது, “தற்போது நாட்டை சர்வாதி காரமாக மாற்ற சிலர் வழிவகை செய்கின்றனர். டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர்.
ஜெயலலிதா இருந்தபோது மோடியா, லேடியா என்றார். அப்போது ஒரு பெண்ணுக்கு இருந்த தைரியம் தற்போது பழனிசாமிக்கு ஏன் இல்லை? நானும் ஓட்டு போட்டுத்தான் பழனிசாமி முதல்வர் ஆனார்” என்று பேசினார்.
அப்போது, அங்கு இருந்த இளைஞர்களில் ஒருவர் “கூவத்தூரில் நீங்களும்தானே பழனிசாமிக்கு ஓட்டு போட்டீர்கள்” என்றார். அங்கிருந்த திமுகவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த இளைஞரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
தொடர்ந்து பேசிய கருணாஸ், “127 எம்எல்ஏக்களும் வாக்களித்தது பழனிசாமிக்காக அல்ல. சசிகலாவுக்காகத்தான். இதை எல்லாம் கூற பழனிசாமி தயாரா ? மேலும் கோடநாடு ஜெயலலிதாவின் இடம்தான். அதில் சசிகலாவுக்கும் பங்கு உண்டு. ஆனால், அங்கு நடந்த கொலைகளுக்கு யார் காரணம் என கண்டுபிடித்தார்களா?” என்று பேசினார்.