

கரூர்: கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேலை ஆதரித்து, தோரணக்கல் பட்டியில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், என்ன பேசுவது என்றே தெரியாமல், ஏதேதோ பேசி வாக்கு கேட்கிறார்.
ஆனால், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி, நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம். அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்றது. ஆனால், 36 மாத திமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்னும் 24 மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்.
திமுக கொடுத்த 520 வாக்குறுதிகளில், 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். அதிமுக சட்டப்பேரவையிலும், வெளியிலும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, 27 மாதங்கள் கழித்து மகளிர் உரிமைத்தொகையை வழங்கினர். திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் சிறையில் உள்ளார். அவரை செயல்வீரர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
அதிமுகவில் மதம், இனம் பார்ப்பது இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிமுக எம்.பி.யாக இருந்த அன்வர் ராஜா, நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், திமுகவினர் பேசவில்லை.
அதிமுக ஆட்சியில் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம். தற்போது விலைவாசி விண்ணை முட்டுகிறது. இதற்குக் காரணமான திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட, அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செந்தில்பாலாஜி வீடியோ... தற்போது சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது, அவர் முறைகேடுகள் செய்ததாகக் கூறி மு.க. ஸ்டாலின் பேசிய வீடியோவும், அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலினை விமர்சித்துப் பேசிய வீடியோவும் பொதுக்கூட்டத்தின்போது எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டன.