

சென்னை/ நாமக்கல்/ சேலம்: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, சென்னை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு தருவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை, நாமக்கல்,சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் வீடு, கொண்டித்தோப்பு பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்ததொழிலதிபர் வீடு மற்றும் புரசைவாக்கம், கொரட்டூர், விருகம்பாக்கத்தில் சிலரது வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை கொரட்டூரில் ஒரு தொழிலதிபர் வீட்டில் கணக்கில் வராத ரூ.2.50 கோடி நேற்று பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். தனியார் பேருந்து நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு சொந்தமாக நிதி நிறுவனங்கள், பள்ளிகளும் உள்ளன. சென்னையில் இருந்து வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் இவரது வீட்டில் நேற்று காலை சோதனை நடத்தினர். உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த ரூ.4.50 கோடியை கைப்பற்றினர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகர அதிமுக செயலாளரான நகராட்சி கவுன்சிலர் பாலசுப்பிரமணியத்தின் வீடு, அவரது நகைக் கடைகள், அவரது மகன் வீடுகளில் வருமான வரித் துறை உதவி ஆணையர் பிரதீப் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை நடத்தி, ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, திருச்சி, தென்காசி, திருவண்ணாமலையிலும் சில தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடந்ததாகவும், பல கோடி பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.