

சென்னை: வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். 8, 9 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்தும் இருக்கக்கூடும். தமிழகத்தில் இன்று முதல்8-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 102 டிகிரி வரையும், கடலோரப் பகுதிகளில் 99 டிகிரி வரையும் உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 4 செமீ, ராமநாதபுரம் பாம்பன், கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு ஆகிய இடங்களில் தலா 3 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 2 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், தொண்டி, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, முக்கடல் அணை ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
14 இடங்களில் சதம்: இதனிடையே நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெயில் அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தியில் தலா 106 டிகிரி, தருமபுரி, மதுரை விமான நிலையம், திருப்பத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, திருத்தணி, வேலூர், சேலம், மதுரை மாநகரம், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், கோவை ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.