

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக மக்களவை பொதுத்தேர்தல், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்.19-ம்தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்தநிலையில் வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடவும் பரப்பவும் ஊடங்களுக்கு உரிய வரையறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
பிரதிநிதித்துவச் சட்டப்படி, எந்த ஒரு நபரும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்பவோ கூடாது என அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. அல்லது கருத்துக்கணிப்பு வெளியிடுவதற்கான தேதி மற்றும் நேரத்தை நிர்ணயித்து அறிவிக்கும் அதிகாரமும் ஆணையத்துக்கு உள்ளது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், அன்றைய நாளிலிருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது ஏப்.17-ம் தேதி மாலை 6 முதல் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவோ அதனை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்பவோ தடை விதிப்பதாக ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி இந்த காலகட்டத்தில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களை, எந்தவித மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.
இந்த விதிமுறைகளை மீறும், எவருக்கும் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.