மகளிர் குழுக்களுக்கு வழங்கிய பசுக்கள் எத்தனை? - அறநிலைய துறை பதிலளிக்க உத்தரவு

மகளிர் குழுக்களுக்கு வழங்கிய பசுக்கள் எத்தனை? - அறநிலைய துறை பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களில் எத்தனைபசுக்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை தனிநபர்களுக்கு வழங்க தடை விதிக்கக்கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் பக்தர்கள் தங்களின்நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கோயில்களுக்கு பசுக்களை தானமாக வழங்குகின்றனர். ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த பசுக்களை முறையாக பராமரிப்பது இல்லை. பலகோயில்களில் தானமாக வழங்கப்பட்டுள்ள பசுக்கள் மாயமாகியுள்ளன. எனவே கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ள பசுக்கள் உள்ள கால்நடைகளை பாதுகாக்க உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும். கோயில்களில் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களை தனிநபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. பால் கொடுப்பதை நிறுத்திய பசுக்கள் அடிமாடுகளாக விற்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு ப்ளீடர்என்.ஆர்.ஆர். அருண் நடராஜன்,கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்தியதும் அவை கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கும் வழங்கப்படுகிறது என விளக்கமளித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, கோயிலுக்கு தானமாக பெறப்பட்ட பசுக்களை கோயில் நிர்வாகம்தானே பராமரிக்க வேண்டும். தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பசுக்கள் அவர்களிடம்தான் உள்ளது என்பதை யார் கண்காணிப்பர் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ரங்கராஜன், எந்த சுய உதவிக்குழுக்களிடமும் அந்த பசுக்கள் இல்லை என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ஒவ்வொரு கோயிலும் எத்தனை பசுக்களை தானமாக பெற முடியும்என வரம்பு நிர்ணயம் செய்யலாம் என்றனர். மேலும், தானமாகவழங்கப்பட்ட பசுக்களில் எத்தனைபசுக்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்.29-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in