Published : 04 Apr 2024 05:27 AM
Last Updated : 04 Apr 2024 05:27 AM

மாவட்டம்தோறும் இளம் தேர்தல் பணியாளர் வாக்குச்சாவடி: சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு இளைய தேர்தல் பணியாளர்கள் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கவும், வாக்குச்சாவடி மையங்களில் குழந்தை பராமரிப்பு மையம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் பணிக்காக வரவேண்டிய 165 கம்பெனி துணை ராணுவப்படையினரில் கடந்த ஏப்.1-ம் தேதி 144 கம்பெனியும், 2-ம் தேதி மீதமுள்ளவர்களும் தமிழகம் வந்துவிட்டனர். ஏற்கெனவே வந்த 25 கம்பெனியுடன் சேர்த்து தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட 190 கம்பெனியும் தமிழகம் வந்து சேர்ந்துள்ளன.

கூடுதல் கண்காணிப்பு: தொகுதி நிலவரத்தை கருத்தில் கொண்டு தேர்தல் பொது, காவல்துறை பார்வையாளர்கள் ஆய்வு அடிப்படையில் தற்போது 204 பறக்கும்படைகள், 191 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒலி, ஒளி காட்சியை செய்தித்துறை நிறுத்தி வைத்துள்ளது.

வாக்குச்சாவடிகளில் பொதுமக்களுக்கு சாமியானா பந்தல், இருக்கைகள், குடிநீர் ஆகியவை அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பெண்களுக்கு தனியான வாக்குச்சாவடி அமைக்க வேண்டாம் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். கூடுதல் வாக்காளர்கள் இருந்து, கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கப்படும் பட்சத்தில் அதில் பெண்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியாளர்கள் குறைவாக இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும்2 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள். மற்ற மாவட்டங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள்.

விளவங்கோடு தொகுதிஇடைத்தேர்தல் நடைபெறுவதால்,அங்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்தும் மகளிரால் செயல்படுத்தப்படும் வாக்குச்சாவடி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குச்சாவடி ஆகியவை ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒன்றும் இளம் பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் ‘யூத் மேனேஜ்மென்ட் பூத்’ ஒரு மாவட்டத்துக்கு ஒன்றும் அமைக்க தேர்தல் ஆணையம் அறிவறுத்தியுள்ளது. இருக்கும் வசதிகள் அடிப்படையில் இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

இந்நிலையில் ஏப்.2-ம் தேதிமாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், பெண் பணியாளர்கள் வசதிக்காக தன்னார்வ அடிப்படையில், அந்த வாக்குச்சாவடி மையத்தில் அங்கன்வாடி கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கொண்ட குழந்தைகள் பராமரிப்புக்கான அறை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

‘சி விஜில்’ செயலி மூலம், இதுவரை 2,193 புகார்கள் பெறப்பட்டன. இதில் சரியானதாக 1,694 புகார்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையர் ஆலோசனை: நேற்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் அனைத்து மாநிலதலைமைச்செயலர்கள், டிஜிபிக்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழக தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர்ஜிவால், காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரி ஜெயராம், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அண்டை மாநிலஎல்லைப்பகுதிகள் மேலாண்மை,பணம், பரிசுப் பொருட்கள் தடுப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டன.

ரூ.141 கோடி பறிமுதல்: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான கடந்த மார்ச்16-ம் தேதி முதல்,நேற்று ஏப்3-ம்தேதி காலை வரை, ரூ.65 கோடியே 59 லட்சத்து 44 ஆயிரம் ரொக்கம், ரூ.3 கோடியே 68 லட்சத்து 62ஆயிரம் மதிப்பு மதுபானங்கள், ரூ.74.41லட்சம் மதிப்பு கஞ்சா, போதைப் பொருட்கள், ரூ.59 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.14 கோடியே 87 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பு பரிசுப்பொருட்கள் என மொத்தம் ரூ.141கோடியே 31 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ளவை பறக்கும் படை,நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமானவரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x