

மதுரை: மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, சட்டவிரோதக் கட்டுமானங்களை தடுக்கஎன்ன நடவடிக்கை எடுத்தது என்பது தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த மதியழகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் திருச்சி மாநகராட்சியில் வீடு கட்டி வருகிறேன்.இந்நிலையில், சட்டவிரோதமாக கட்டிடம் கட்டி வருவதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. என் கட்டுமானத்தைவரைமுறைப்படுத்த மாநகராட்சிக்கு மனு அனுப்பினேன். இருப்பினும் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீஸை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் சட்டவிரோதக் கட்டுமானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட குழு இதுவரை எத்தனை முறை கூடி விவாதித்து உள்ளது? அந்த நகராட்சி அமைப்புகளில் எத்தனை சட்டவிரோதக் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
சட்டவிரோதக் கட்டுமானங்களை கண்காணிப்பதற்காகஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, உரிய நடவடிக்கை எடுக்கிறதா அல்லது சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியவர்களைப் பாதுகாக்கிறதா? கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்ட பிறகு, 38 வருவாய் மாவட்டங்களில் எத்தனை கூட்டங்கள் நடந்துள்ளன? உள்ளாட்சி அமைப்புகளில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதுதொடர்பாக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.