

சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ள சுமார்120 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
இக்குழந்தைகளுக்கு தகவல் பரிமாற்ற திறன்களுக்கான பேச்சுப் பயிற்சி மற்றும் தொழில்சார் சிகிச்சைகள், குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக வழங்கப்படுகிறது. தொடர் சிகிச்சைக்கு வரும் குழந்தைகள், நல்ல முன்னேற்றம் அடைகின்றனர். இந்நிலையில், உலக மதியிறுக்கம் (ஆட்டிசம்) விழிப்புணர்வு தினத்தையொட்டி, மருத்துவமனையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், மருத்துவமனையில் உள்ள மையத்தில் வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகள் குறித்தும் சிகிச்சையின் மூலம் தங்கள் குழந்தைகள் பெற்ற முன்னேற்றம், மற்ற குழந்தைகளைப்போல இயல்பான நிலைக்கு வர இந்த சிகிச்சைகள் எவ்வாறு உதவியது என்பதையும் பகிர்ந்து கொண்டனர். குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
2 வயதுக்குள் மதியிறுக்கம் (ஆட்டிசம்) கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டு தொடர்ந்து சிகிச்சை அளித்தால், அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும். அந்த வகையில், சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களின் முயற்சியை பாராட்டியமருத்துவர்கள், ஆட்டிசம் பிரச்சினைஉள்ள குழந்தைகள் இம்மையத்தைஅணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம் என தெரிவித்தனர்.