Published : 04 Apr 2024 06:10 AM
Last Updated : 04 Apr 2024 06:10 AM
சென்னை: வணிகர்கள் ரூ. 2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்லும்போது ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்து செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வரம்பு நிர்ணயித்துள்ளது.
இதனால், வணிகர்கள், சிறு-குறு தொழில் முனைவோர், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணத்தைக் கொண்டு செல்லும்போது எந்தவித ஆவணங்களையும் கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். எனவே அவர்களுடைய சிறு மூலதனங்கள் முடக்கப்படுவதால் அவர்களது தொழில், வர்த்தகம் முடக்கப்பட்டு பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது.
போராட்டத்துக்கு அழைப்பு: இதன் காரணமாக இவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை வாழ்வாதாரம் இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இது சம்பந்தமாக தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை ரொக்கப் பணம் எடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்க வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஏப்ரல் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் விரைந்து தலையிட்டு வணிகர்கள் அதிகபட்சம் ரூ.2லட்சம் வரை எடுத்துச் செல்லும் வகையில் அவர்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT