Published : 04 Apr 2024 06:15 AM
Last Updated : 04 Apr 2024 06:15 AM
சென்னை: தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘கச்சத்தீவை ஏன் தாரை வார்த்தீர்கள்?’’ என்று திமுக, காங்கிரஸ் கட்சியினரை கேட்டால், கன்னியாகுமரி கடல் பகுதியில் உள்ள ‘வாட்ஜ்வங்கி’ எனும் பெரும் பரப்பை கச்சத்தீவுக்கு பதிலாக பெற்றுக் கொண்டதாக சொல்லி மோசடி, பித்தலாட்டம் செய்கின்றனர்.
‘வாட்ஜ் வங்கி’ என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இருந்து வந்தது. இயற்கை வளம் மிகுந்த அந்த பகுதியில் 3ஆண்டுக்கு மட்டுமே இலங்கை நாட்டினர் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதன் பிறகுஅங்கு மீன் பிடிக்கும் அனுமதி இந்தியர்கள் தவிர யாருக்கும் இல்லை என்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையிடம் இருந்து ‘வாட்ஜ்வங்கி’ பகுதியை இந்தியா பெற்றதாக அந்த ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால்,கன்னியாகுமரியோடு இந்த விவகாரத்தை இணைத்து பேசுவது கண்டிக்கத்தக்கது.
அதேபோல, ‘‘கச்சத்தீவுக்கு பதிலாக 6 லட்சம் இந்திய பூர்வீக மக்களுக்கு (மலையக தமிழர்கள்) குடியுரிமை வழங்கப்பட்டது’’ என்ற மற்றொரு உண்மைக்கு புறம்பான தகவலை ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்க, மோசடி வேலைகளில் காங்கிரஸ், திமுகவினர் ஈடுபட்டு வருவது இதன்மூலம் தெளிவாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT