

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே கல்குறிச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: தமிழகத்தில் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்திய போது கேலி செய்தனர்.
பின்னர் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டது. பசித்த வயிற் றோடு ஒரு குழந்தை கூட பள்ளிக்குச் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை மு.க.ஸ்டாலின் செயல் படுத்தி உள்ளார். எனக்கு மிகவும் பிடித்த திட்டம் இது. இத்திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதன்மூலம் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பெருமை கிடைக்கும். ஆனால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பாஜக அரசு தொல்லை கொடுக்கிறது. அது பொல்லாத அரசு.
தமிழகத்தில் பாஜக அரசு வேரூன்ற முயற்சித்து பார்க்கிறது; மிரட்டி பார்க்கிறது. தமிழகத்தில் ஓர் இடத்தில் கூட பாஜக வெற்றி பெறக் கூடாது. சுண்டுவிரலைக் கூட பதித்துவிட கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுண்டு விரலை பதித்துவிட்டால், பின்னர் பெரு விரல், தொடர்ந்து காலை ஊன்றிவிடுவர். கர்நாடகாவில் காலை பதித்தார்கள், பறித்து தூக்கி வீசி விட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. தெலுங்கானா- வில் பதிக்க முயன்றனர். அங்கும் பதிக்க விடாமல் காங்கிரஸ் தடுத்துள்ளது.
அதேபோல் தமிழகத்திலும் ஊன்ற விடக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக என்ன செய்துள்ளது. ஏதாவதொரு திட்டத்தை சொல்லுங்கள். பாஜக வேட்பாளர் சுற்றுலா பயணி போன்றவர். அவருக்கும், சிவகங்கை தொகுதிக்கும் சம்பந்தமே இல்லை. காங்கிரஸ் அரசு தான் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தியது. ரூ.60,000 கோடி விவசாயக் கடனை ரத்து செய்தது. ஊரெல்லாம் வங்கி கிளைகளை திறந்து கல்விக் கடன் வழங்கினோம். தற்போது கல்விக் கடன் கொடுப்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார். தமிழரசி எம்எல்ஏ, மானாமதுரை நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் உடன் இருந்தனர்.