

மதுரை: பிரதமர் மோடிக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார்.
மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனி வாசனை ஆதரித்து செல்லூரில் டிடிவி.தினகரன் பேசியதாவது: யார் பிரதமர் ஆக வாக்கு கேட்பது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும், அக்கட்சி வேட்பாளர்களுக்கும் தெரியவில்லை. அதுபோல, முதல்வர் ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் மோடி மீண்டும் பிரதமர் ஆக, அவரது பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கிறார்.
பாஜக கூட்டணியில் அண்ணாமலை, எல்.முருகன், ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனை வரும் போட்டியிடுகிறார்கள். இதில் ஓபிஎஸ் தைரியமாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதுபோல், விருதுநகரில் ராதிகா, நெல்லையில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி யிடுகிறார். தென்காசியில் ஜான் பாண்டியன், தேனியில் நான் போட்டியிடுகிறேன். இப்படி தலைவர்களாக இருந்தாலும் நாங்களே போட்டியிடுகிறோம். ஆனால், பழனிசாமி சேலத்தில் போட்டியிடலாமே.
வேட்பாளர் கிடைக்காமல் யார் யாரையோ பலியாடாக்கி வேட்பாளர்களாக நிறுத்தி விட்டு அவர் ஓடி விட்டார். திமுகவுடன் பழனிசாமி, திரைமறைவில் கைகோத்துள்ளார். திமுகவுக்கு உதவும் வகையில் வாக்குகளை பிரிக்கவே அதிமுக போட்டியிடுகிறது. பல வழக்குகளில் சிக்காமல் இருக்கவே, அதிமுக தலைவர்கள் இந்த வேலையில் இறங்கி இருக்கிறார்கள். பழனிசாமியை, முதல்வராக்கிய நமக்கும், அவரது ஆட்சியை 4 ஆண்டுகள் பாதுகாத்த பிரதமர் மோடிக்கும் துரோகம் செய்துள்ளார். இப்படி துரோகத்தைத் தவிர வேற எதுவுமே செய்யாத பழனிசாமி கூட்டம் இன்னும் திக்கு முக்காடி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.