Published : 04 Apr 2024 04:06 AM
Last Updated : 04 Apr 2024 04:06 AM

“மனோ தங்கராஜின் குடும்ப அதிகாரத்துக்கு ஜூன் 4-ல் முற்றுப்புள்ளி” - பொன் ராதாகிருஷ்ணன்

மார்த்தாண்டம் அருகே பயணம் கிராமத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். உடன் விளவங்கோடு இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் நந்தினி.

நாகர்கோவில்: அமைச்சர் மனோ தங்கராஜின் குடும்ப அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளாக ஜூன் 4-ம் தேதி இருக்கும் என, கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்த்தாண்டம் அருகே பயணம் கிராமத்தில் இருந்து நேற்று பிரச்சாரத்தை தொடங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணி 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் பின், 2019 வரை இயற்கை அழிவதுபற்றி திமுகவும், காங்கிரஸும் கவலைப்படவில்லை. அதன் பின்னர் தான் இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது.

நான்குவழிச் சாலை வரக்கூடாது என்பது அவர்களது நோக்கம். அடுத்து, தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக மாற்றுவது. இதன்மூலம் களியக்காவிளையில் உள்ள பழமையான புனித அந்தோணியார் தேவாலயம் உட்பட 32 தேவாலயங்கள், 30 கோயில்கள், 4 மசூதிகளை இடித்து மாவட்டத்தில் மதக்கலவரங்களை உருவாக்குவது இவர்களின் அடுத்த நோக்கம். தற்போது பல்வேறு வழிபாட்டு தலங்களில் குழுக்களை உட்கார வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் பட்டுவாடாவும் நடக்கிறது. தேர்தல் ஆணையம் சரியாக இருந்தால் இதை தடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் இரட்டை இலக்க வெற்றி பகல் கனவு என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி வருகிறார். இந்த தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும். மனோ தங்கராஜின் குடும்ப அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளாக ஜூன் 4 அமையும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் அவர் டெபாசிட் வாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நந்தினி, முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பயணம் பகுதியிலிருந்து தொடங்கிய பிரச்சாரம் உண்ணாமலைக்கடை, கொடுங்குளம், மார்த்தாண்டம், சாங்கை, வெள்ளி விளாகம், விரிகோடு, மாமூட்டுக்கடை, நட்டாலம், பள்ளியாடி, இலவுவிளை, கொல்லஞ்சி, நெல்வேலி, முளங்குழி, காப்புக்காடு, முன்சிறை, மாராயபுரம், சென்னித் தோட்டம், ஈத்தவிளை, மடிச்சல்,படந்தாலுமூடு, திருத்துவபுரம், கழுவன்திட்டை, குழித்துறை வழியாக ஞாறான்விளையில் நிறைவடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x