

கோவில்பட்டி: மக்களவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்தப்போவது மகளிர் உரிமைத் தொகை திட்டம்தான் என, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி நேற்று காலை விளாத்திகுளம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது: தமிழகத்தில் களத்திலும், மக்களின் ஆதரவிலும் அதிமுகவே முதலிடத்தில் உள்ளது. திமுக தோல்வி பயத்தில் உள்ளது. அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணியை அறிவித்தவுடன் திமுகவில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
கள நிலவரத்தை பார்த்தால் அதிமுக வேட்பாளர் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரிகிறது. தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றும் கட்சி அதிமுக. வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தி வைத்திருந்தோம். ஆனால், இன்றைக்கு 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. அதிமுகவின் அருமை மக்களுக்கு தற்போது தெரிந்துள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், திருட்டு, கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத மக்கள், அது குறித்து பிரச்சாரத்துக்கு செல்லும் திமுகவினரிடம் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்தப் போவது, மகளிர் உரிமைத் தொகை திட்டம்தான். மக்களுக்கு ஒன்றுமே செய்யாத கட்சி திமுக. இதனைத் தட்டிக் கேட்கும் கட்சி அதிமுக. இவ்வாறு அவர் பேசினார்.