Published : 03 Apr 2024 05:37 AM
Last Updated : 03 Apr 2024 05:37 AM
சென்னை: தமிழக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று காணொலி வாயிலாக தலைமை தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கானஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையிலான தமிழக தேர்தல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பிடிபட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கருத்தில் கொண்டு, 58 செலவின பார்வையாளர்கள் மற்றும் மாநில அளவில் செலவினபார்வையாளரையும் நியமித்துள்ளது. தமிழகத்துக்கான மாநிலஅளவிலான செலவின பார்வையாளராக கடந்த 1983-ம் ஆண்டுபணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த பி.ஆர்.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 11 மணி மற்றும் மாலை 3 மணி என இரு பிரிவாக, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சுங்கத்துறை, கலால்வரித் துறை, மாநில ஆயத்தீர்வைத் துறை. ஜிஎஸ்டி ஆணையர், வணிகவரித்துறை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முகமைகளின் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி முன்னிலையில், தேர்தல்செலவின பார்வையாளர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, தகவல் மற்றும் பணி ஒருங்கிணைப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியின் செயல்பாடு, ஒவ்வொரு துறையினரும் மேற்கொண்டு வரும்பணிகள், பணம், பரிசுப்பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று ஏப்.3-ம் தேதி மாலை 3 மணிக்கு, இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் காணொலி வாயிலாக, மாநில தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து நாளை ஏப்.4-ம் தேதி , தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் எஸ்பிக்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள், விளவங்கோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT