Published : 03 Apr 2024 05:23 AM
Last Updated : 03 Apr 2024 05:23 AM

குமரியில் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் பிரச்சினை: இரு தரப்பினர் மோதலில் 6 பேர் காயம்

கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் முன்பு தொழுகை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மோதிக் கொண்டவர்களை விலக்கிய போலீஸார்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக போலீஸார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 6 பேர் காயமடைந்தனர். மோதல் தொடர்பாக 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி பிரதான சாலையில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இங்கு தொழுகை நடத்துவதில் இரு தரப்பினரிடையே பலஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.தற்போது ரமலான் நோன்பு நடைபெற்று வரும் நிலையில், பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக சில நாட்களாக இரு தரப்பினரிடையே பிரச்சினை நிலவுகிறது.

இது தொடர்பாக குமரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் போலீஸார் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தி, நோன்புக் கஞ்சி காய்ச்ச அனுமதி வழங்கப்பட்டது. எனினும், மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, நேற்று காலை தொழுகை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். திடீரென இரு தரப்பினிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக்கொண்டனர்.

15 பேர் கைது: போலீஸார் கண் முன்னே நடந்தஇந்த சம்பவத்தால் பள்ளிவாசல் முன்பு பரபரப்பு நிலவியது. ஆண்களும், பெண்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 6 பேர் காயமடைந்தனர். சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 15 பேரை போலீஸார் கைது செய்தனர். பள்ளிவாசல் முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபடத் திரண்டனர். தொடர்ந்து அங்கும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x