Published : 03 Apr 2024 05:33 AM
Last Updated : 03 Apr 2024 05:33 AM
விருதுநகர்: விருதுநகரில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான16 கிலோ தங்க நகைகளை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டி சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் பொன்னுகணேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பிற்பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் கூரியர் நிறுவனத்தின் 2 வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டனர்.
அவற்றில் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு நகைக் கடைகளுக்கு 12 கிலோ தங்க நகைகள்கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால், அவற்றுக்கு ஆவணங்கள் எதுவுமில்லை. இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 12 கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்து, விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல, சத்திரரெட்டியபட்டி விலக்கில் தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலர் சுப்பிரமணிய பாண்டியன் தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் கூரியர் நிறுவன வேனை நிறுத்திச் சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில், உரிய ஆவணங்களின்றி 4 கிலோ 200 கிராம்தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் சாத்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளைக் கொண்டுசென்றது தெரியவந்தது. அதையடுத்து, வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட 4 கிலோ 200 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட 16 கிலோ 200 கிராம் தங்கநகைகளும் விருதுநகர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.8 கோடி என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT