

காரைக்குடி: காரைக்குடி அருகே இரவில் ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த பெண் ஒருவர், மறுநாள் காலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மித்ராவயலில் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது இடைமறித்த பெண்கள், மதுக் கடையை மூட வேண்டுமென வாக்குவாதம் செய்தனர். குறிப்பாக ஒரு பெண் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
அவர் கூறும்போது, எங்கள் பகுதியில் மதுக்கடை இருப்பதால், யாரும் என் மகனுக்கு பெண் தர மறுக்கின்றனர் என புகார் கூறினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலைஅதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் அந்த கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது, ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த அந்தப் பெண், சேவியர்தாஸுக்கு ஆரத்திஎடுத்து வரவேற்றார். அப்போது அந்தப் பெண், காங்கிரஸ் பிரச்சாரத்தின்போது கடுமையாக எதிர்த்துப் பேசினேன் என்று வேட்பாளரிடம் கூறினார்.
இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.