Published : 03 Apr 2024 07:41 AM
Last Updated : 03 Apr 2024 07:41 AM

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை உறுதி

கோவை இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை.

கோவை: தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்று கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை கூறினார்.

கோவை மக்களவைத் தொகுதிபாஜக வேட்பாளரான அண்ணாமலை, ஆனைகட்டி பகுதியில் நேற்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடிக்கு பழங்குடி மக்கள்மீது அதிக அக்கறை உள்ளது. மலைப் பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்களை பிரதமர் மோடி மட்டும்தான் கொண்டு வந்துள்ளார்.

ஆனைகட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைவிவகாரத்தில், திமுக குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது. இவர்களே பிரச்சினையைத் தொடங்கி வைத்துவிட்டு, வேறு ஒருவர் மீதுபழி போடுகின்றனர். இயற்கையுடன் ஒன்றியிருக்கும் ஆனைகட்டி போன்ற பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும்.

இங்குள்ள மரங்கள் எல்லாம் வைரத்துக்குச் சமமானவை. இந்தியாவின் ஆதிகுடி பழங்குடிமக்கள்தான். பிரதமர் மோடி, பழங்குடியைச் சேர்ந்த பெண்ணைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கச் செய்துள்ளார். மலைவாழ், பழங்குடி மக்களின் பாதுகாவலர் மோடிதான்.

இந்த ஒரு வண்டிதான் (தன்னுடைய பிரச்சார வாகனத்தை சுட்டிக்காட்டி) டெல்லி செல்லும். மற்றவைஎல்லாம் உள்ளூர் வண்டிகள். தமிழகத்தில் ஒரு டாஸ்மாக் கடையை எடுப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூடுவதற்குத்தான், அரசியலுக்கு வந்துள்ளோம்.

மது அருந்துபவர்களை அருந்தவேண்டாம் என்று நாம் கூறமுடியாது. டாஸ்மாக் மதுபானங்கள் அனைத்தும் ஸ்பிரிட் வகையைச் சேர்ந்தவை. இதனால் வயிற்றுக்கு மட்டுமல்ல, மொத்த உடல் நலனுக்கும் கேடு. எனவே, அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூடிவிட்டு, கள்ளுக்கடைகளைத் திறப்போம்.

கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐபொய் சொல்கிறது என்று கூறுபவர்கள், இது தொடர்பாக விவாதம் செய்யத் தயாரா? கச்சத்தீவு ஒப்பந்தமே இந்திரா காந்தி, ஒரு அமைச்சர் மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்தான். நாம் கச்சத்தீவைக் கொடுத்தபோதும், இந்திய மீனவர்கள் அதைப் பயன்படுத்தலாம் என்று இருந்தது. அதையும் ஆர்டிக்கிள் 6-ஐ வைத்து எடுத்து விட்டனர். கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பதே எங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x