Published : 03 Apr 2024 04:00 AM
Last Updated : 03 Apr 2024 04:00 AM

பாஜகவை தோற்கடிக்க திருப்பூர் பனியன் தொழிற்சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோர்.

திருப்பூர்: மக்களவை தேர்தலில் மத்திய பாஜக அரசை தோற்கடிக்க வேண்டுமென, திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில், அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் கே.நாகராஜ், ஏஐடியுசி பனியன் சங்க பொதுச் செயலாளர் என்.சேகர், எல்பிஎஃப் பனியன் சங்க பொதுச் செயலாளர் க.ராமகிருஷ்ணன், ஐஎன்டியுசி செயலாளர் அ.சிவசாமி, ஹெச்.எம்.எஸ். செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் செயலாளர் மு.சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்து 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கடந்த 10 ஆண்டு காலத்தில் தொழிலாளர்கள் வாழ்வில் மிகப்பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தராதது மட்டுமின்றி, ஏற்கெனவே இருக்கும் வேலைவாய்ப்பையும் சீர்குலைத் துள்ளது.

தொழிலாளி வர்க்கம் நூற்றாண்டுகளாக போராடிப் பெற்ற சட்ட உரிமைகளைப் பறித்துள்ளது. 29 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக சுருக்கியுள்ளது. இதன் மூலமாக உழைப்பு சுரண்டலை அதிகரிக்க வைத்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழிவகை செய்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 9 ஆண்டு காலத்தில் தொழிலாளர், முதலாளிகள், அரசு பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தை ஒரு முறைகூட கூட்டவில்லை.

பாஜக அரசின் தவறான கொள்கைகள் காரணமாக வேலை வாய்ப்பு நகரமான திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி விதிப்பு, கரோனா பொது முடக்கம், பஞ்சு, நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு, டிராபேக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர் நிலைகுலைந்துள்ளது. கணிசமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் தத்தளித்து வருகின்றன. ஒரு பகுதி நிறுவனங்கள் தொழிலில் இருந்தே வெளியேறிவிட்டன.

வங்கதேசத்தில் இருந்து தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் படி, 2016-ம் ஆண்டு இங்கு வந்த ஆடைகளின் மதிப்பு 152 மில்லியன் டாலராக இருந்தது. தடுப்பு வரி நீக்கப்பட்ட பிறகு 2022-ம் ஆண்டு இங்கு வரக்கூடிய ஆடைகள் மதிப்பு 750 மில்லியன் டாலருக்கு மேல், அதாவது 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உள்நாட்டு தொழில் துறையினர், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள் ளது.

பொருளாதார பேரழிவிலி ருந்து திருப்பூரை மீட்பதற்கு, தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கு மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து இண்டியா கூட்ட ணியை வெற்றி பெற வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் வரும் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதற்காக 10 ஆயிரம் துண்டறிக்கைகளை வெளியிட்டு, வரும் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொழிலாளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x