நடுக்குப்பம், அயோத்திக்குப்பம் பகுதியில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு கோரும் தேமுதிக

நடுக்குப்பம், அயோத்திக்குப்பம் பகுதியில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு கோரும் தேமுதிக
Updated on
1 min read

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட நடுக்குப்பம், அயோத்திக்குப்பம் பகுதியில் உள்ள 29 வாக்குச்சாவடிகளை பதற்றமானவை பட்டியலில் சேர்த்து உரிய பாதுகாப்பு அளிக்க தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் மத்திய சென்னை மக்களவை தொகுதி வேட்பாளராக தேமுதிகவைச் சேர்ந்த ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார். இந்நிலையில், பார்த்தசாரதி மற்றும் அதிமுக முன்னாள் எம்பி ஆதிராஜாராம் ஆகியோர் நேற்று காலை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள நடுக்குப்பம், அயோத்திக்குப்பத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. ஆனால், பதற்றம் இல்லாதவை என்று அவற்றை நீக்கியுள்ளனர். 11 மையங்களில் உள்ள 29வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும்.

இவற்றுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சிசிடிவிகேமரா பொருத்த வேண்டும். துணை ராணுவப் படையை பணியமர்த்த வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்'' என்றார்.

அதிமுக முன்னாள் எம்பி ஆதிராஜாராம் கூறும்போது, ``இந்தபகுதியில் உள்ள 29 வாக்குச்சாவடிகளும் ஏற்கெனவே பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டவையாகும். உள்ளூர் உளவுப் பிரிவினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் இதுகுறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கவில்லை.

இதனாலேயே, அவர்கள் பதற்றமானவை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டனர். எனவேதான், மிகவும் பதற்றமான இந்தவாக்குச்சாவடிகளுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in