Published : 03 Apr 2024 05:25 AM
Last Updated : 03 Apr 2024 05:25 AM

வேட்பாளர் எண்ணிக்கை அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிப்பு: தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்

மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் சென்னை மாநகராட் சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. | படம்: ம.பிரபு |

சென்னை: சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 3 மக்களவைதொகுதிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கூடுதலாக தலா ஒரு வீடியோ கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தென்சென்னை பொது பார்வையாளர் முத்தாடா ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அரசியல் கட்சிகள் முன்னிலையில், தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில், கூடுதல் இயந்திரங்களுக்கான கணினி குலுக்கல் பணி மேற்கொள்ளப்பட்டது. வடசென்னை மற்றும் தென் சென்னையில் வாக்குப்பதிவுக்கு, வேட்பாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மத்திய சென்னைக்கு2 இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

ஏற்கெனவே கடந்த மார்ச் 21-ம் தேதி நம்மிடம் உள்ள மின்னணு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கிலிருந்து, பிரித்து அனுப்புவதற்கான கணினி குலுக்கல் நடத்தப்பட்டது. அப்போது 4,461 இயந்திரங்கள் அனுப்பப்பட்டன. இன்று, கூடுதலாகத் தேவைப்படும் 7,374 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கணினி குலுக்கல் நடத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு மேல் இந்தஇயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளின் விநியோகமையத்துக்கு அனுப்பப்படும்.

நேற்று (ஏப்.1-ம் தேதி) சென்னையில் உள்ள 3.25 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போதும் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

16 வீடியோ கண்காணிப்பு குழு: வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர் 4,472 பேர் மற்றும் 20 சதவீதம் உபரி அலுவலர்கள் உட்பட19,412 பேருக்கு இறுதி உத்தரவு வழங்கும் பணி நடைபெற்றுள்ளது. சென்னையில் இதுவரை ரூ.5.55 கோடி மதிப்பு தங்கம், ரூ.15 லட்சம் மதிப்பு கைபேசிகள், ரூ.7 லட்சம் மதிப்பு கணினி மற்றும் ரொக்கம் உட்பட ரூ.9.13 கோடி மதிப்பு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களுக்கான செக்டார் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு அவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

1502 பேருக்கு நோட்டீஸ்: மேலும், கூடுதலாக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒன்று என 16 வீடியோ கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டு, அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பார்வையாளர்களும் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பணிக்கு வராத 1,502 பேருக்கு விளக்கம் கேட்டுள்ளோம். இதற்கான குழுவிடம் சரியான காரணங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x