

சென்னை: மும்பையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.13.50 லட்சம் ரொக்கம், 13 தங்க கட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள், ரயில்வே போலீஸாருடன் இணைந்து, நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மும்பையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒரு விரைவு ரயில்வந்தது. அந்த ரயிலில் வந்த ஒரு பயணியின் பைகளை சோதித்தபோது, அதில் ரூ.13.50 லட்சம் ரொக்கம், தங்கக்கட்டிகள் இருந்தன.
இதையடுத்து, அவரை சென்ட்ரல்ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அவர் ஆந்திர மாநிலம் குமுல்பகுதியைச் சேர்ந்த ஜமேதார் மெஹபூப் பாஷா(60) என்பதும், ஜூன் மாதம்நடைபெற உள்ள தனது மகனின் திருமணத்துக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்தது தெரியவந்தது.
இந்த பணத்துக்கு அவரிடம்உரிய ஆவணங்கள் இல்லாததால்,அவை வருமான வரித்துறையினரிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.