

சென்னை: சென்னை கதீட்ரல் சாலை அமராவதிஹோட்டல் முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள கழிவுநீர் பாதாளசாக்கடை நுழைவு வாயில் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளை சுற்றி இன்று (ஏப்.3) முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து டிடிகே சாலை வழியாக மியூஸிக் அகாடமி சந்திப்பு வந்து கதீட்ரல் சாலையில் இடதுபுறம் திரும்பும் அனைத்து வாகனங்களும், ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து நேராக செல்லாமல் மாறாக ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி முரேஸ் கேட் ரோடு வழியாக சென்று வலதுபுறம் திரும்பி கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக சென்று கதீட்ரல் சாலை அடைந்து இலக்கை நோக்கி செல்லலாம்.
பிஷப் வாலஸ் கிழக்கு சாலை வழியாக கதீட்ரல் சாலை செல்லும் வாகனங்கள் மியூஸிக் அகாடமி சந்திப்பில் யூ-வளைவு எடுத்து சவேரா ஹோட்டல் முன்பாக உள்ளசர்வீஸ் சாலையில் சென்று நீல்கிரீஸ்சந்திப்பை அடைந்து, அங்கு யூ-வளைவு எடுத்து மியூஸிக் அகாடமிமேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று இலக்கை அடைய லாம்.
வி.பி.ராமன் சாலை, லாயிட்ஸ் சாலை, இந்தியன் வங்கி சந்திப்பில் இருந்து, டிடிகே சாலை வழியாக மியூஸிக் அகாடமி சந்திப்பு வலதுபுறம் உள்ள சர்வீஸ் ரோடு வழியாககதீட்ரல் சாலை செல்லும் வாகனங்கள், இடதுபுறம் திரும்பி சவேரா ஹோட்டல் முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பை அடைந்து யூ-வளைவு எடுத்து மியூஸிக் அகாடமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
ஜே.ஜே.சாலை, ஸ்ரீமன் சீனிவாசன் சாலை, அம்புஜம்மாள் தெரு, பாஷ்யம் பஷிர் அகமது தெரு மற்றும் பார்த்தசாரதி கார்டன் தெரு வழியாக வரும் வாகனங்கள் டிடிகேசாலை வந்து மியூஸிக் அகாடமி சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பாமல் வலதுபுறம் திரும்பி சவேரா ஹோட்டல் முன்பு உள்ள சர்வீஸ் ரோடில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பை அடைந்து யூ-வளைவு எடுத்து மியூஸிக் அகாடமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று அவர்களின் இலக்கை அடையலாம். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.