

மதுரை: மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை நேதாஜி சாலை, ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பகுதி களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: இந்த தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை. இரண்டே இரண்டு கருத்தை மட்டும் நான் வைக்க விரும்புகிறேன். தமிழகம் பழைய தவறான பாதையை விட்டு தற்போது முன்னேறியுள்ளது. என் உழைப்பு, முதல்வரின் தயவால் எண்ணற்ற திட்டங்கள் மதுரைக்கும், மதுரை மாநக ராட்சிக்கும் கிடைத்துள்ளன. மாநிலத்திலும் எண்ணற்ற திட்டங் கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 1 ரூபாய்க்கு 35 பைசா வரியைக் கொடுத்ததை நிறுத்தி 29 பைசா கொடுப்பதை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசுகின்றனர்.
மாநிலப் பட்டியலில் உள்ள கல்வி உரிமை, நிதி உரிமையைப் பறித்துள்ளனர். கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ-ல் வெளியானது பச்சைப் பொய். புரளியை எழுப்பி உள்ளனர். படித்த மாநிலத்தில் மோசடியான வேலையைப் பார்க்க முயல்கின்றனர். ஜனநாயகம், நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள்`இண்டியா' கூட்டணிக்கு வாக்களியுங்கள். தேர்தல் நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்து, எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்கை முடக்கி சமமான தேர்தலைச் சந்திக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஓர் அமைச்சரை ஓராண்டு சிறையில் வைக்கின்றனர். டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார பிரிட்டிஷ் மன்னர் லண்டனில் இருந்தார். இன்று டெல்லியில் உள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் ஜனநாயகம் அழிந்து விடும். இவ்வாறு பேசினார்.