Published : 03 Apr 2024 04:02 AM
Last Updated : 03 Apr 2024 04:02 AM
கடலூர்: மாற்றம் வேண்டும் என்று நினைப் பவர்கள் திமுக, அதிமுகவை ஒதுக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து, கடலூரில் நேற்று மாலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: தானே புயலின் போது இப்பகுதி மக்களுக்கு ஓடிவந்து உதவியது தங்கர் பச்சான் தான். கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், கடலூருக்கு யாரை தேர்வு செய்யலாம் என்று நினைத்த போது, தகுதியான வேட்பாளர் தங்கர் பச்சான் என்று முடிவு செய்து, அவரை நிறுத்தியுள்ளோம்.
எழுத்தாளர், சிந்தனையாளர், நேர்மையானவர், நியாயமானவர். உங்களுக்காக டெல்லி வரை சென்று சண்டை போடக் கூடியவர். கடந்த 25 ஆண்டுகளாக திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளனர். அக்கட்சியினர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கடலூர் சிப் காட்டால் பொதுமக்களுக்கு கேன்சர் நோய் உண்டாகிறது. இங்குள்ள மக்களின் தாய் பாலில் கூட ‘டயாக்சின்’ என்ற நச்சுப் பொருள் உள்ளது. இந்த சிப் காட்டுக்கு எதிராக பாமக பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தியுள்ளது.
பாமகவின் போராட்டத்துக்கு பிறகு தான் சில வரன் முறைகள் செய்யப்பட்டுள்ளன. 66 ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தை என்எல்சி நாசப்படுத்தி வருகிறது. 40 ஆயிரம் ஏக்கரை அழித்தது; 60 ஆயிரம் ஏக்கரை அழிக்க நினைக்கிறது. வேளாண் துறை அமைச்சரே என்எல்சிக்கு நிலத்தை கையகப்படுத்தி தருகிறார். இழப் பீடு தருவதாக என்எல்சி நமக்கு பிச்சைப் போடுகிறது. வள்ளலார் நமது கடவுள். அவர் அருள் வழங்கும் வடலூர் பெரு வெளியில் சர்வதேச மையத்தை கட்டுவதை விட்டுவிட்டு, சென்னை,கடலூர், வெளிநாட்டில் என எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். இதற்காக பாமக போராடி வருகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத் எனது மைத்துனர்.
அவர் ஏன் இங்கு வந்து போட்டியிடுகிறார்? அங்கு சீட் கிடைக்காததால் இங்கு ஓடி வந்துள்ளார். எனக்கு கட்சி தான் முக்கியம்; பிறகு தான் குடும் பம். மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், திமுக, அதிமுகவை ஒதுக்குங்கள்; கடலூரில் இருந்து மாற்றத்தை தொடங்குங்கள் என்றார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் சண்.முத்து கிருஷ்ணன், மாநில நிர்வாகி பழ தாமரைக் கண்ணன் மற்றும் பாமகவினர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். எனது மைத்துனர் விஷ்ணு பிரசாத் கடலூருக்கு வந்து போட்டியிடுவது ஏன்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT