

சிவகாசி: தோல்வி பயம் காரணமாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்ட வடமாநில பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குவதாக, சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இண்டியா கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள், தோல்வி பயத்தால் காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தவில்லை. காஷ்மீரில் தொடங்கிய பாஜகவின் தோல்வி கன்னியாகுமரி வரையிலும் எதிரொலிக்கும். பாஜக வலுவாக உள்ள குஜராத்தில் கூட பாஜக அறிவித்த வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சராக உள்ள ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங்கை பாஜக வேட்பாளராக அறிவித்தும், அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அதற்கு மோடியின் எதிர்ப்பு அலை, தோல்வி பயம்தான் காரணம். டெல்லியின் துணை முதல்வர் 13 மாதங்களாக சிறையில் உள்ளார். ஜார்க்கண்ட் முதல்வரான பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் ஹேமந்த் சோரனை, ரவுடியைப் போல தேடிப் பிடித்து அமலாக்கத் துறை கைது செய்கிறது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 8 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளார். பிரதமரிடம் கேட்காமல் முதல்வரை எப்படி கைது செய்வார்கள்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நியாயமாக பதில் சொன்ன தில்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்துக்கு சென்ற ஒரே பிரதமர் மோடி. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் அசோகன் எம்.எல்.ஏ, மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.