

திருப்பத்தூர்: இந்தியாவில் மக்களாட்சி தொடர்ந்து இருக்க நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி தெரிவித்தார்.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து திருப்பத்தூர் அருகே நெற்குப்பையில் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்திலேயே மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரிகள் ஆகிய மூன்றும் உள்ள ஒரே மாவட்டம் சிவகங்கை தான். மோடி சர்வாதிகாரப் பாதையில் செல்கிறார். கடந்த காலங்களில் முதல்வராக இருக்கும்போது யாரும் கைதாக வில்லை. ஆனால், தற்போது முதல்வர்கள், அமைச்சர்களைப் பதவியில் இருக்கும் போது கைது செய்கின்றனர்.
உங்களை எச்சரிக்கை செய்வது எனது கடமை. நாங்கள் முதல்வர்களைப் பாதுகாப்போம். இந்த முறை இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் இந்திய ஜனநாயகம் பிழைத்திருக்கும். இந்தியாவில் மக்களாட்சி தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும். மாநில உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்குரிய நிதி கிடைக்க வேண்டும். இதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.