Published : 02 Apr 2024 06:47 PM
Last Updated : 02 Apr 2024 06:47 PM
தருமபுரி: “தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வெற்றி பெற்றால், பாலக்கோடு பகுதியில் தக்காளி கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சவுமியா அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் வாரியாக வேட்பாளர் சவுமியா அன்புமணியும், கட்சி நிர்வாகிகளும் தினமும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் இன்று காலை பாலக்கோடு ஒன்றியம் கரகத அள்ளி ஊராட்சியில் பிரச்சாரத்தை தொடங்கி ஒன்றிய கிராமங்கள் வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தில் சவுமியா அன்புமணி பேசியது: ''தருமபுரி மாவட்டத்தில் நல்ல மண் வளம் இருந்தபோதும் விவசாயத்தை அச்சமின்றி மேற்கொள்ள ஏற்ற வகையில் நீர்வளம் இல்லை. இதற்குக் காரணம் தேவைக்கேற்ற நீர்ப்பாசன திட்டங்களை அரசுகள் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு நிலுவையில் இருக்கும் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வரவேண்டுமெனில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் எனக்கு தேர்தலில் ஆதரவு தாருங்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் பாலக்கோடு பகுதியின் பிரதான மற்றும் நீண்ட நாள் கோரிக்கையான தாக்காளி கூழ் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்திலேயே தருமபுரி மாவட்டத்தில்தான், அதிலும் குறிப்பாக பாலக்கோடு வட்டத்தில் தான் தக்காளி சாகுபடி அதிகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விலைச் சரிவு காலங்களில் தக்காளி விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்க தக்காளியில் இருந்து மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிக்கும் வகையில் தக்காளி கூழ் தயாரிப்பு தொழிற்சாலையை பாலக்கோடு பகுதியில் அமைத்துத் தர வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சாரத்தின்போது, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, பாமக மாநில துணைத் தலைவர் செல்வம், பாலக்கோடு நகர தலைவர் ராஜசேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT