கீழூர் நினைவிடம், ஆயி மண்டபம், பாரதி பூங்காவை மேம்படுத்த புதுச்சேரி ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி அரசு சின்னமான ஆயி மண்டபத்தை பார்வையிட்ட துணை நிலை ஆளுநர்.
புதுச்சேரி அரசு சின்னமான ஆயி மண்டபத்தை பார்வையிட்ட துணை நிலை ஆளுநர்.
Updated on
1 min read

புதுச்சேரி: வரலாற்று சிறப்பு மிக்க கீழூர் நினைவிடம், ஆயி மண்டபம், பாரதி பூங்காவை மேம்படுத்தவும், அழகுப்படுத்தவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி விடுதலை பெற்ற காலத்தில் அதனை இந்தியாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க கீழூர் நினைவிடத்தை துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். கீழூர் நினைவிடத்தில் கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் கலியபெருமாள் மற்றும் அதிகாரிகள் துணை நிலை ஆளுநரை வரவேற்றனர்.

வாக்கெடுப்பில் கலந்த கொண்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத் தூணைப் பார்வையிட்ட துணை நிலை ஆளுநர் அதனை அழகுப்படுத்தவும், சுற்றுலாத் துறையின் மூலம் நினைவிடத்தை மேம்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். பிற்கால சந்ததியினருக்கு புதுச்சேரியின் விடுதலைப் போராட்ட வரலாறு தெளிவுப்படும்படியான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

கீழூர் நினைவிடத்தில் துணை நிலை ஆளுநர் கூறுகையில், "நெஞ்சத்தில் தீக்கனலாய் இருக்கின்ற தேச பக்த உணர்வு, மக்கள் எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும் அதைத் தாண்டியும் இந்திய ஒற்றுமைக்கு அறை கூவல் விடுக்க முடியும் என்கின்ற வரலாற்றைப் பதித்த இடமாக நம்முடைய கீழூர் கிராமம் இருக்கிறது.

இங்கே கலந்து கொண்ட 178 பேரில் 170 பேர் அன்றைய பிரெஞ்சு வல்லரசுக்கு எதிராக இந்திய திருநாட்டோடு இணைய வேண்டும் என்று வாக்களித்து இருப்பது எத்தகைய சுதந்திர வேட்கையும் தேசப்பற்றும் அவர்கள் உள்ளங்களில் இருந்திருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது. இந்த மகத்தான நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வந்து அத்தகைய பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது பெருமை தருகிறது" என்றார்.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள புதுச்சேரி அரசு சின்னமான ஆயி மண்டபத்தை பார்வையிட்ட துணை நிலை ஆளுநர், ஆயி மண்டபத்தை அழகுப்படுத்தவும், பூங்கா சூழலை மேம்படுத்தவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்கள் குறித்த குறிப்புகளை பொதுமக்கள் அறிய எழுதி வைக்கவும் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியை பசுமை நகரமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவுப்படுத்துமாறு உள்ளாட்சித் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். பாரதி பூங்காவில் உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல் மற்றும புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in