

100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக நிர்ணயம் செய்து, மாவட்டங்கள் தோறும், தேர்தல் நடத்தும் அதிகாரி தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அங்கன்வாடி பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் இப்பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த வெகுமதியும் அளிப்பதில்லை. கடும் வெயிலில் செல்வோருக்கு குறைந்த பட்சம் குளிர்பானம் கூட வாங்கிக் கொடுப் பதில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
“தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி வரையச் சொல்கின்றனர். இதற்கான கோல மாவு கூட வாங்கித் தருவதில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்வதில்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் வர நெருக்கடி தருகின்றனர்.
சொந்தச் செலவில் தனியார் பேருந்தில் பயணிக் கிறோம். தேர்தல் பணியில் ஈடுபடும் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு சிறப்பு ஊதியத்துடன் பயணப்படி, உணவுப் படி வழங்குகின்றனர். ஆனால் எங்களை கண்டு கொள்வதே இல்லை” என்று அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பழனியிடம் கேட்டபோது, “பணியாளர்களின் அன்றாட பணி முடிந்த பிறகுதான், இந்த விழிப்புணர்வு பணிக்கு பயன்படுத்துகிறோம். அவர்களை தன்னார்வலர்களாக தான் ஈடுபடுத்துகிறோம்” என்கிறார்.
கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான அருண் தம்பு ராஜிடம் இது தொடர்பாக கேட்டபோது, “அங்கன்வாடி பணியாளர்களுக்கென வெகுமதி எதுவும் இல்லை. இருப்பினும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவர்களுக்கென ஏதேனும் வழங்க வாய்ப்பிருக்கிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்கிறார்.