“எங்கும் தைரியமாக பேசுவேன், ஆனால்...” - கண்கலங்கிய பிரேமலதா

“எங்கும் தைரியமாக பேசுவேன், ஆனால்...” - கண்கலங்கிய பிரேமலதா
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியத்தில் அதிமுக – தேமுதிக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பங்கேற்றார்.

அப்போது பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு, “நான் எனக்காக வாக்கு சேகரிக்க வர வேண்டும் என பிரேமலதாவை கேட்டபோது, ‘நான் வருகிறேன், அங்கிருக்கும் என் தொண்டர்களை விடமாட்டேன், குமரகுருவை வெற்றி பெற செய்ய வைக்கிறேன்’ என்றார்.

இப்படிச் சொன்ன எனது சகோதரியை நினைத்து என் மனம் குளிர்கிறது” என்றார்.
சற்று நிறுத்தி, “கேப்டன் இல்லை என்றாலும், நாங்கள் உங்களைப் பார்த்துக் கொள்கிறோம்” என்று குமரகுரு கூற கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பினர்.

குறிப்பாக தேமுதிக தொண்டர்கள் உணர்வுத் ததும்பலுக்குச் செல்ல, மேடையில் அமர்ந்திருந்த பிரேமலதாவுக்கு கண்ணீர் மல்கியது. குமரகுரு பேசப்பேச கண்களைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தார். அடுத்து பேச வந்த பிரேமலதா, “எனக்கு மேடையில் அமர்ந்திருந்தபோது, துக்கம் தாங்க முடியாமல், நெஞ்செல்லாம் அடைத்தது.

என்னை மீறி கண்ணீர் வந்தது. தமிழ்நாட்டில் எந்தத் தொகுதிக்கு போனாலும் தைரியத்துடன் பேசுவேன். ஆனால் கேப்டன் வாழ்ந்த இந்த பூமியை (ரிஷிவந்தியம்) என்னால் மறக்க முடியவில்லை. ரிஷிவந்தியம் சிறப்பான தொகுதி. அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி. எனவே அவரின் ஆன்மா ரிஷிவந்தியத்தில் தான் உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in