Published : 02 Apr 2024 05:38 AM
Last Updated : 02 Apr 2024 05:38 AM
சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி இனிமேல் மூன்று தவணைகளாக வழங்கப்படும் புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசு சார்பில் டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுநிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து,பிக்மி' எண் பெற்றவுடன் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படும். இதனைத் தொடர்ந்து, நான்காவது மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
இதற்கிடையில், உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரீட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பெட்டகம் இரண்டு முறை வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் அத்திட்டத்தில் தற்போதுசில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில், இதற்குமுன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்தநான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT