

அரக்கோணம்: திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் ரூ. 3 லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் மிச்சம் என முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக அரக்கோணம் தொகுதி மக்களவை வேட்பாளர் ஏ.எல். விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தலின்போது அறிவித்த 520 அறிவிப்புகளில், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. பொய் பேசுவதற்கான நோபல் பரிசை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். ஆனால், நான் பொய் பேசுகிறேன் என்கிறார்.
இது ஜனநாயாக நாடு. உங்களின் குடும்ப அரசியல் இங்குகிடையாது. அதற்கு, இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். மேலும், மு.க.ஸ்டாலின் போகும் இடம் எல்லாம் அதிமுக மற்றும் என்னை பற்றி தான் அவதூறாக பேசுகிறார். இதற்கு, எல்லாம் எங்களின் தொண்டன் கூட பயப்பட மாட்டார்கள்.
கிராமத்தில் விவசாயம் செய்து வந்தவர் தானே என்று, என்னை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கக்கூடாது. விவசாயி உழைக்க பிறந்தவன். மு.க.ஸ்டாலினுக்கே விவசாயி தான் சாப்பாடு போடுகிறான் என அவர் சிந்திக்க வேண்டும். திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் 3 லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் மிச்சம்.
மின்சாரம், அரிசி, பருப்பு, எண்ணெய் விலையேற்றத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும், நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, பல்வேறு ஊர்களுக்கு பெட்டியுடன் சென்று மக்களிடம் புகார் மனுக்களை வாங்கினீர்கள். அதை என்ன செய்தீர்கள். சாவி தொலைந்து விட்டதா, அல்லது பெட்டியே காணாமல் போனதா என தெரியவில்லை.
அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவரும் மருத்துவம் படிக்க 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு. அதன் மூலமாக 2,160 பேர் மருத்துவம் படித்து வருகிறார்கள். இது அதிமுகவின் சாதனை.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. திமுகவைச் சேர்ந்த நிர்வாகியான ஜாபர் சாதிக் என்பவர் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். போதை கலாச்சாரம் உள்ளிட்டவற்றால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடம் இருந்தும் ரூ.530 கோடி தேர்தல் பத்திரமாக திமுக அரசு வாங்கியுள்ளது. மேலும், கடந்த3 ஆண்டுகளில் பல தொழிலதிபர்கள், ஆன்லைன் ரம்மி நடத்துபவர்கள் ஆகியோரிடம் ரூ.656 கோடி தேர்தல் பத்திரமாக வாங்கியுள்ளனர். மு.க.ஸ்டாலின் தன்னை சூப்பர் முதல்வர் என சொல்லி கொள்கிறார். ஊழல் செய்வதில் சூப்பர் முதல்வர் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு பேசினார்.