

சென்னை: காங்கிரஸும், திமுகவும் தங்களது சுயநலத்துக்காக கச்சத்தீவை தாரைவார்த்தன என்று பாமக நிறுவனர்ராமதாஸ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:
ராமதாஸ்: தமிழகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது.
கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை இன்றுவரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தெரிந்தே அனுமதித்தார்.
அப்போதைய கருணாநிதி அரசுமீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இதனால் கருணாநிதி அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்குபயந்து தான் கருணாநிதி மவுனமாகஇருந்துவிட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவற்றை இப்போதும் மறுக்க முடியாது. இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் திமுக கூறுகிறது.இந்த சிக்கலில் திமுக - காங்கிரஸின்நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளன.
எல்.முருகன்: கச்சத்தீவு விவகாரத்தில் தங்களின் நயவஞ்சக நாடகம் அம்பலமாகியுள்ளதால் காங்கிரஸ் - திமுகவினர் அரண்டுபோயுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி ஓர் மாநில எல்லையை மாற்றி அமைக்க கூட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்திசட்டம் இயற்ற வேண்டும். ஆனால்இதை எதையும் மதிக்காமல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசும்தங்கள் சொந்த நலனுக்காக கச்சத்தீவை தாரைவார்த்து விட்டன.
சுயநல அரசியலுக்கு கச்சத் தீவை தாரைவார்த்து விட்டு இன்றுபாஜகவை நோக்கி குதர்க்க கேள்விஎழுப்பினால் மட்டும் இவர்களை மக்கள் நம்பி விடுவார்களா?
காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்: இந்தியாவின் நிலப்பரப்பை எந்தவிதமான காரணமும் இன்றி மற்ற நாடுகளுக்கு தாரைவார்த்து காங்கிரஸ் தொடர்ந்து துரோகம் செய்தே வந்துள்ளது. காங்கிரஸ் இந்த தேசத்துக்கு செய்த துரோகத்தால் பாரதம் இன்றுவரை பலஇன்னல்களை, பயங்கரவாதி களின் போதை கடத்தல் கும்பல் களின் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது சுயநலத்துக்காக பாரதத்தின் இறையாண்மையை, நிலப் பரப்பின் உரிமையை தாரை வார்த்தார்கள். இதனை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.