சென்னை மாநகராட்சியில் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூல்: ஏப்.30-க்குள் வரி செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்

சென்னை மாநகராட்சியில் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூல்: ஏப்.30-க்குள் வரி செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த நிதியாண்டில் ரூ.1800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரிசெலுத்தி வருகின்றனர். அரையாண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் சொத்து வரி செலுத்த வேண்டும். இதில் கடந்த நிதியாண்டில் ரூ.1700 கோடிசொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்திருந்தது.

அந்த இலக்கை எட்டுவதற்காக, கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் வீடு வீடாகச்சென்றும் வரி வசூல் செய்து வந்தனர். குடியிருப்பு சங்கங்கள் உதவியுடன் சிறப்பு வரி வசூல் முகாம்களையும் மாநகராட்சி நடத்திவந்தது. தேர்தல் பணிகளுக்கு நடுவே சொத்துவரி வசூல் பணிகளையும் மாநகராட்சி மேற்கொண்டு வந்தது.

கடந்த மார்ச் 29 முதல் 31-ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தாலும், சொத்து வரிவசூல் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. நேற்று நள்ளிரவு 12 மணி வரை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.1800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடியே 20 லட்சம் அதிகமாகும். இதேபோன்று தொழில் வரி ரூ.533 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.10 கோடியே 71 லட்சம் அதிகமாகும். நடப்பு அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30-ம் தேதிக்குள் செலுத்தினால், அதில்5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

அதன் பிறகு செலுத்தப்படும் சொத்து வரி, 1 சதவீதம் அபராதத்துடன் வசூலிக்கப்படும் என மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in