

பல்லாவரம்: பல்லாவரத்தை அருகே திருநீர்மலையில் ஜெயின் ஆல்பின் மெடோஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 952 வீடுகள் உள்ளன. இதில் 700 வீடுகளில் மொத்தம், 3 ஆயிரம் பேர்வசிக்கின்றனர். மேலும், இந்த குடியிருப்பில், 1,500 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த குடியிருப்பு வளாகத்தில்உள்ள வீடுகளுக்கு பத்திரப்பதிவு தடையை நீக்க வலியுறுத்தி, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த சூரியநாராயண் கூறியதாவது: திருநீர்மலையில் நாங்கள் வசிக்கும் இந்த குடியிருப்பு உள்ள இடம், 16.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இதில், 12 சர்வே எண்கள் உள்ளன. இதில் 56, 57,70, 70/1 ஆகிய நான்கு சர்வே எண்களில் உள்ள நிலங்கள் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது எனவும் இந்த சர்வேஎண்களில் உள்ள குடியிருப்புகளை, வாங்கவோ விற்பனை செய்யவோ, கடன் பெறவோ இந்துஅறநிலைய துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். மேலும் தடையில்லா சான்று இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்படமாட்டாது. என்று 2023, ஜூன் மாதம் முதல் பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூறி வருகின்றனர்.
நாங்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இங்கு வசிக்கிறோம். சி.எம்.டி.ஏ. அனுமதி பெற்றே கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அப்போதெல்லாம், பத்திரப் பதிவு செய்ய எந்த தடையும் இல்லை. தற்போது திடீரென, கோயில் இடம், இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல், பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று கூறுவது, எங்களுக்கு புரியவில்லை. சொந்தமாக வீடு வாங்கி குடியேறிய பிறகும், சொந்த நாட்டில் அகதிகள்போல அவதிப்பட்டு வருகிறோம். இதனால், இங்கு வசிக்கும் மக்கள் இணைந்து, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவுசெய்துள்ளோம் என்றார்.