Published : 02 Apr 2024 06:18 AM
Last Updated : 02 Apr 2024 06:18 AM
சென்னை: செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 59 குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பாஜக மாநில நிர்வாகிக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளரும், தொழிலதிபருமான கே.வெங்கடேஷ், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்துடன், கல்வி நிறுவனங்களும் நடத்தி வருகிறேன். பாஜகவில் மாநில செயலாளராகவும் பதவி வகித்து வருவதால் அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் எனக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் என் மைத்துனர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய முத்து சரவணனை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்ட்டருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி சமூகவலைதளங்களில் வீடியோஒன்றும் பரவியது.
நெல்லை கூலிப்படைத் தலைவரான பைரவா என்ற வீரமணி, போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் முத்துசரவணனின் சகோதரர் கருப்புசாமி என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கருப்புசாமி தற்போதுதலைமறைவாக இருந்து வருகிறார்.
நான் அதிகமாக வெளியே செல்லவேண்டாம் என போலீஸ் உதவிஆணையரும் என்னை எச்சரித்துள்ளார். எனது உயிருக்கு ஆபத்துஇருப்பதால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
ஆந்திராவில் 49 வழக்குகள்: இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல்குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி தாக்கல் செய்தபதில் மனுவில், ``மனுதாரருக்கு எதிராக செங்குன்றம் காவல் நிலையத்தில் மட்டுமே 10 குற்ற வழக்குகள் உள்ளன.
இதுதவிர, செம்மரக் கடத்தலில் ஈடுபட்டது உட்பட ஆந்திராவில் மட்டுமே 49 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார். சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதா என இவரது வீட்டை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் எல்லா சரித்திர பதிவேடு குற்றவாளிகளும் தங்களுக்கும் பாதுகாப்பு வழங்கக் கோருவர். அது சாத்தியமில்லை என்பதால் மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் என பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மனுதாரர் மீது தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த சூழலில் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது. அதேநேரம், மிரட்டல் இருப்பதாக மனுதாரரை எச்சரிக்கும் போலீஸாரின் நடவடிக்கையையும் புரிந்துகொள்ள முடியவில்லை’’ என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT