

சென்னை: தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்ஸிராணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனி யார் தொண்டு நிறுவனங்கள் சார்பில், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்காக காப்பகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பதாக தெரிகிறது. பலர் தங்களின் நிரந்தர வசிப்பிடத்தை விட்டு, வெகு தொலைவில் உள்ள காப்பகங்களில் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாநிலம் முழுவதும் உரிய அங்கீகாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான காப்பகங்கள் உள்ளதால், இவற்றில் விடப்பட்டுள்ள வாக்காளர்களின் முழுமையான விவரம் மாவட்ட நிர்வாகங்களிடம் இல்லை. அதே வேளையில், இந்த காப்பகங்களில் விடப்பட்டுள்ள தகுதியான முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நாட்டின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், அவர்களை வாக்களிக்க வசதி செய்து தர வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.
எனவே, இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றும், பெறாமலும் உள்ள தனியார் காப்பகங்களில் விடப்பட்டுள்ள முதியோர், மாற்றுத் திறன் வாக்காளர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ வாக்களிக்க வைக்க உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.