ஆரத்தி எடுக்க குவிந்த கிராம மக்கள்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி வேதனை

திருமாஞ்சோலையில் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி.
திருமாஞ்சோலையில் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி.
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை அருகே ஆரத்தி எடுக்க கிராம மக்கள் குவிந்ததால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேதனை தெரிவித்தார்.

கிராமங்களில் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் தங்களுக்கு பிடித்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டும் ஆரத்தி எடுத்தனர். தற்போது எந்த கட்சி வேட்பாளர் வந்தாலும் கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் ஆரத்தி தட்டோடு வரிசையில் நிற்கின்றனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரு பெண்ணுக்கு தலா ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுக்கின்றனர். இதற்காகவே, வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவழித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை அருகே தமறாக்கி, அழகச்சிப் பட்டி, ஒக்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி பிரச்சாரம் செய்தார். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் அவரை சூழ்ந்து கொண்டு ஆரத்தி எடுத்தனர். பின்னர் பணம் கொடுப்பார்கள் என நினைத்து ஏக்கத்துடன் வேட்பாளரை பார்த்தனர். ஆனால், நாம் தமிழர் கட்சியினரோ அவர்களிடம் என்ன சொல்வதென தெரியாமல் கிளம்பினர்.

அதன் பின்னர் திருமாஞ்சோலையில் வேட்பாளர் எழிலரசி பேசுகையில் ‘‘நாங்கள் வாக்கு சேகரிக்கச் சென்ற கிராமங்களில் எங்களை சுற்றி நின்று முதியவர் முதல் குழந்தை வரை ஆரத்தி எடுத்தனர். வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தால் காசு கிடைக்கும் என்று, கிராம மக்களை அரசியல் வாதிகள் எவ்வளவு இழிவு நிலையில் வைத்துள்ளனர். இது வேதனை அளிக்கிறது. கட்சியினரின் குழந்தைகளை வெளி நாட்டில் படிக்க வைக்கின்றனர். ஆனால், நமது குழந்தைகளை ஆரத்தியில் கிடைக்கும் ரூ.100-க்காக காத்திருக்க வைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in