

காரைக்குடி: அதிமுக, பாஜகவினர் சுற்றுலா பயணிகள் போல் தொகுதிக்கு வந்துள்ளனர் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே கொத்தமங்கலம், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ப.சிதம்பரம் பேசியதாவது: திமுக தலைமையிலான அரசு 3 ஆண்டுகள் செய்த நலத் திட்டங்களை எதிர்க்கட்சிகள் மறைத்தாலும் மக்களிடம் மறைக்க முடியவில்லை. ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகள் மன்மோகன் ஆட்சியில் செய்ததை இருட்டடிப்பு செய்ய முடியாது. ஆனால் இந்த 10 ஆண்டுகளில் அதற்கு ஈடாக ஒன்றும் நடக்கவில்லை. அதிமுக, பாஜக வேட்பாளர்கள் இருவரும் சுற்றுலா பயணிகள். அவர்கள் இருவரும் இப்பகுதியில் இருப்பவர்கள் அல்ல.
கொடைக்கானல், ஊட்டி போன்று சுற்றுலா வந்துள்ளனர். இந்த தொகுதியை பற்றி பழைய வரலாறும் தெரியாது. எதிர்காலத்தை பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. நாங்கள் இங்கேயே இருப்பவர்கள். இந்த மண்ணில் பிறந்தவர்கள். இந்த மண் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறை, அவர்களுக்கு இருக்காது. ‘இண்டியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடனை ரத்து செய்வோம். தொடர்ந்து புதிய கடனும் வழங்கப்படும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 145 டாலர் அப்போது பெட்ரோல் விலை ரூ.65 முதல் ரூ.70 ஆக இருந்தது. தற்போது ஒரு பீப் பாய் கச்சா எண்ணெய் 85 டாலர் தான். ஆனால் பெட்ரோல் விலை ரூ.101 ஆக உள்ளது. விலையை கூட்டி ரூ.2.5 லட்சம் கோடியை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.